Wednesday, May 11, 2011

என்னம்மா தோழி…


ஆடிமாதம் கன்னிக்கோவில் திருவிழாவில்
அழுது அடம்பிடித்து வாங்கிய
பஞ்சு முடி வைத்த பிளாஸ்டிக் பொம்மை
எல்லாரையும்விட நெருக்கமாகிவிட்டது.
எனக்கு வாங்கிய பட்டுப்பாவாடையின் பாதிச்சரிகை
என் குட்டி பொம்மைக்கு புடவையானது.
எனக்கு கவளம் அம்மாவூட்ட
என் பொம்மைக்கு பருக்கை நானூட்ட
அம்மா வந்து பெருக்கும்வரை
தரையெல்லாம் சிந்திக்கிடந்தது சந்தோஷம்.
எங்களிருவரையும் பார்த்த எல்லோரும்
ஒன்று போலிருப்பதாய்
கைகளை நெட்டிமுறித்து
திருஷ்டி கழித்தார்கள்.
அடுத்த திருவிழா ஆரம்பிக்கும்போதுதான்
என் பொம்மைக்கு உடம்பு கெடத்தொடங்கியது.
மழைக்கு நைந்த தலைமுடி கிழிந்து
வட்டநிலா மொட்டையாய் மிஞ்சியது.
தலையாட்டும்போது கொட்டும் இமைகள்
உண்மையிலேயே கொட்டிப்போய் மூளியாய்.
மார்கழி கோலத்தில் தவறவிட்டதில்
உடலெங்கும் பொருத்தமில்லா
வண்ணத் தேமல்கள்.
ஒன்னாம் வருட பிறந்தநாளுக்கு முன்னரே
எல்லாம் தேய்ந்து போனதென் பொம்மை.
அம்மா திட்டினாள் வீட்டுக்கு ஆகாத சூனியமென்று.
இயலாமையோடு தந்த அடிகளுக்குப் பின்னர்
கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டு
உதட்டை கடித்து ஒளித்து வைக்கிறேன்
கையைவிட்டு இறக்காமல் பார்த்துக்கொள்கிறேன்
என் சுயத்தின் மிச்சமென எதிர்க்கத் தெரியாமல்.
இப்போதும் பார்ப்பவர்கள் சொன்னார்கள்
தூக்கி எறியச்சொல்லி.
விட்டகுறை தொட்டகுறையென
எத்தனைமுறை என்னையே
நான் தூக்கியெறிவது?