Tuesday, March 22, 2011

இது முன்பனிக்காலம்! (2)

கைபேசி சிணுங்கியது.அப்பா லைனில் இருந்தார்.எனக்கே எனக்கான கோபமும்,அலட்சியமும் பொங்கி அழைப்பை அமைதியில் விட்டேன்.அதற்குப்பிறகும் இரண்டு அழைப்புகள்,வந்த வெறுப்பில் கட்டில்மேல் வீசிவிட்டு என் கைபேசியைப்பற்றி யோசிக்கத்தொடங்கினேன்.அது சவம் மாதிரி படுத்திருந்தது.அது தன் பிறவிப்பயனை அனுபவித்ததேயில்லை.தேயத்தேய குறுஞ்செய்தி அனுப்பியதில்லை.இரவெல்லாம் கதைகள் பேசி அது உயிரிழந்ததில்லை.எப்போதும் ஒரு பாட்டுப்பெட்டியாகவோ,காமிராவாகவோ மட்டுமே இருந்திருக்கிறது.சில சினேகிதிகளைப் பார்க்கும்போது கைபேசியிலேயே மூச்சு விட்டு எனக்கெல்லாம் கைபேசி தேவையா என என்னையே யோசிக்க வைத்துவிடுவார்கள்.நான்கூட அதைப்போலவே மாறிவிடுவேனா?சுவாரஸ்யமற்ற ஒரு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வேனோ என உள்ளுக்குள் ஒரு நாய்க்குட்டி நான் பாவமில்லையா என எட்டி பார்த்தது.பாவம் பார்த்தென்ன,யாரையும் நம்பாவிட்டால் இப்படித்தான் என வெடுக்கென ஒரு காவல்காரி கதவை சாத்தினாள்.மரங்களை வெட்டிவிட்டு சிட்டுகுருவிக்கு தண்ணீர் வைக்கும் போலித்தனமாகவும் பட்டது.

ரொம்ப யோசித்ததால் பசி குடலை எம்பிராய்டரி பண்ணத் தொடங்கியது.(பின்ன?சும்மா வயிற்றைக் கிள்ளியதுன்னே சொல்லிகிட்டு!).இருந்த அரை பாக்கெட் மாகியை எடுத்து எனக்குத் தெரிந்த ஒரே சமையலை செய்யத்தொடங்கினேன்.தட்டில் போட்டு கரண்டியை வைத்த சமயம்,

“ஹேய் எனக்குடி கல்யாணப் பொண்ணு!” என எகிறி தட்டில் கைவைத்தது ஒரு உருவம்.சுஜிதா!என் சித்தப்பா மகள்!

“என்ன கொரங்கே காலேஜ் போகலயா?அதிசயமா மலய விட்டு எறங்கி வந்திருக்க!”

அவள் கல்லூரி ஒரு மடுவில்,ஒரு சின்ன ஏரி பக்கத்தில் மேயும் வாத்துகள் என அழகுணர்ச்சியோடு அமைக்கப்பட்டிருக்கும்.அந்த இடத்திற்கே உரிய காதல் போன்ற பெருவியாதிகள் நுழையக்கூடாதென்று மிகக்கவனமாக அவள் வாத்தியார்கள் சட்டதிட்டங்கள் தீட்டினாலும்,சுஜி சாதாரண ஆளில்லையே!இந்த பயிர் வேலியையே மேய்ந்து அதாவது அவள் லெக்சரரையே காதலிக்க ஆரம்பித்துவிட்டது.ரொம்ப சேஃபாக யாரிடமும் மாட்டாமல் ஸ்டாஃப் ரூமிலேயே காதல் வளர்த்துக்கொண்டிருந்தார்கள்.

“ப்ராஜெக்ட் டீ,அவந்தான் கைடு”

“ப்ராஜெக்ட் வெளங்கிரும்!”

நிறைய சண்டை போடுவோம்,ஆனாலும் எந்த விசேஷம்,நல்லது கெட்டது என்றாலும் சுஜிதா வராமல் நான் போவதில்லை,அவளும் அப்படித்தான்.பின்ன,எங்க சொந்தக்காரங்க மொக்கய தனியா எப்படி சமாளிப்பது?

“என்ன சீதா இந்த வருஷம் கல்யாண சாப்பாடு போட்றுவல்ல?”

“என்ன மாமா நீங்க இந்த வருஷம் மண்டைய போட்றுவீங்கல்ல?”, நினைக்க மாட்டாள்,கேட்டு விடுவாள் சுஜிதா.அதுக்கப்புறம் அந்த மாமா ஏன் எங்க பக்கம் வரப்போகிறார்.பேச வேண்டிய இடத்தில் பேசுவாள்.மற்றநேரத்தில் என்னை பேசவைத்து திட்டு வாங்கிக் கொடுப்பாள்.

“ஹேய் மேகி நல்லா இருக்குடி கல்யாணப்பொண்ணே”,என் சமையலையும் இரசிக்கும் ஒரு ஜீவன்,புளகாங்கிதம் அடைந்துவிட்டேன்!

நன்றி உணர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

“யெஸ் ஐ நோ ஐ நோ,ஆனா அந்த கல்யாணப்பொண்ண கட் பண்ணிரேன்,இர்ரிடேட்டிங் ஆ இருக்கு”

“இதுக்கே இப்டின்னா அப்ப நாளக்கி அவங்கள்ளாம் வந்தா என்ன பண்ணுவ?”

“அவங்கன்னா எவங்க?”

“தெரியாத மாதிரி கேக்குற,உன் வருங்காலம் தான்”

“நாளக்கின்னா நாளக்கேவா,அப்டியே போஸ்ட்போன் பண்ண வேண்டியதுதான்,லீவு கெடக்கல,ஒடம்பு சரியில்லன்னு”

“ஹேய் லூசு நாளக்கின்னா நாளக்கேதான்,உன்ன நாளக்கி பொண்ணு பாக்க வர்றாங்க தெரியாதா ஒனக்கு?”

“என்ன ஒளருற?”

“எனக்கே தெரியும் கல்யாணப்பொண்ணு உனக்குத்தெரியாதா?”

“சத்தியமா தெரியாதுடி,ஜாதகம் பாக்கத்தான் போறதா சொன்னாங்க”-காலை கண்ட கனவு பலிச்சிருமோ?

“உனக்கு பெரியப்பா கால் பண்ணாரே நீதான் எடுக்கல,அவங்க ஏதோ பர்ச்சேஸ் பண்ணப் போறாங்க,என்ன உனக்கு தொனயாயிருக்க சொல்லி அனுப்பிச்சாங்க”

என் கைபேசி கட்டில்மேல் இளித்துக் கொண்டிருந்தது.அதற்காக என் அனுமதி இல்லாமலே எதற்கு இந்த பெண் பார்க்கும் @ ஒஃபிஷியல் சைட் பிசினஸ்?சுஜி ப்ராஜெக்ட் ரெவ்யூக்கு மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பதுபோல் அவனது விவரங்களை ஒப்பிக்கத் தொடங்கினாள்.

“அவன் ஏதோ ஒரு கம்பெனில எதோவா இருக்கானாம்,பாக்க எப்டி இருப்பான்னு தெரியல,போட்டோ வரும்னு சொன்னாங்க,ஆனா திடீர்னு இன்னிக்கி ஜாதகம் பாத்தாங்க,எட்டோ,பத்தோ பொருத்தமோவாமே,செம்மயாமே,அவங்க வீட்டுலகூட பேசுனாங்க, அவங்க எங்க பையன் இப்ப சென்னைலதான் இருக்கான்,நாளன்னிக்கி வைசாக் போயிருவான்,நாளக்கே பாத்துரலாம்னு சொல்லிட்டாங்க”

“வைசாக் என்ன பாகிஸ்தான்ல இருக்கா இல்ல நாந்தான் என்ன ஹாரிபாட்டர் படமா இப்பவே பாக்க,நீகூட என்கிட்ட ஒரு வார்த்த சொல்லல”, என நான் கோவமாக பார்க்க,

“ரிலாக்ஸ்,பாக்கத்தானே வரப்போறாங்க ஏன் ஓவர் சீன் போடற?”

“அதெப்படி என் பெர்மிஷன் இல்லாம என்ன பாக்க வரலாம்?”

“என்ன கேக்காத உன்ன பெத்தவங்க வருவாங்க அவங்கள கேட்டுக்கொ”,என்றபடி பல்லிளித்துக்கொண்டே அந்த லெக்சரருக்குப் குறுஞ்செய்தி அனுப்பத்தொடங்கினாள்.அவள் வேலை அவளுக்கு! நான் அவன் பேரைக்கூட உங்களிடம் சொல்லப்போவதில்லை.எனக்கு விருப்பமில்லாதவனையும் என்னையும் பெயரளவில் நீங்கள் இணைப்பதைக்கூட நான் வெறுக்கிறேன்.அதற்குமேல் சுஜி சொன்ன எதுவும் எனக்கு ஏறவில்லை.முதல்முறை நேர்முகத்தேர்வை சந்திக்கும்போது தொற்றும் பதற்றத்தை திரும்பவும் உணர்ந்தேன் என்றெல்லாம் பொய் சொல்லப்போவதில்லை.நாளை என்ன பேசவேண்டும் எப்படி இதை நிறுத்த வேண்டுமென மனதுக்குள் யோசனைகளை எடைப்போட்டு கொண்டிருந்தேன். வாசலில் “டொட்டொட்டொட்”- ஆட்டோ வந்து நின்றது. முதலில் சித்திதான் உள்ளே நுழைந்தாள்.

“சீதாக்கு இப்பவே கல்யாணக்களை வந்துருச்சு இல்ல”

“பேசாதீங்க சித்தி,நீங்ககூட சொல்லல இல்ல”

“இதுல என்னடா இருக்கு,எல்லார் வீட்டுலயும் நடக்குறதுதானே”

“இப்டி திடீர்னு சொன்னா எப்டி சித்தி?எனக்கு கல்யாணம்ங்கிற ஐடியாவே இல்ல”

“இப்ப வரவழைச்சிக்கோ,அப்பாக்கும் வயசாகிட்டே போகுது,தங்கம் வெல வேற ஏறுது,உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டா அவங்க கொஞ்சம் அக்கடான்னு இருப்பாங்க,அதுக்கப்புறம் சுஜிக்கு வேற பாக்கனும்”

அதற்குமேல் அவர்கள் என்னை பொருட்படுத்தவில்லை.இவள் ஒரு வேலையில்லாதவள் லுக்கை விட்டுவிட்டு சமையல் வேலையை பார்க்கப்போனார்கள்.

“அம்மா இப்ப எதுக்காக இவ்வளவு அவசரமா இந்த ஏற்பாடு,மாவு பிசையறதெல்லாம்”

“பையன் பேரு !@#$%^ (சொல்ல மாட்டேனே!),ஒரே பையன்,பிக்கல் பிடுங்கல் இல்ல,சென்னைல ஒரு வீடு,சொந்த ஊருல ஒரு அஞ்சு ஏக்கர்,போடுறத போடுங்கனு சொல்லிட்டாங்க,இதவிட வேறென்ன வேனும்?”

“அவன் வயசென்ன?”

“உன்னவிட அஞ்சு வயசுதான் பெரியவன்”

“அஞ்சு வயசுதானா?அஞ்சு வருஷம் முன்னாடி கல்யாணம் பண்ணிருந்தா இன்னேரம் கொழந்தைய கான்வெண்டில விட வேண்டியவன்”

“இங்க பாரு,எனக்கும் உங்கப்பாக்கும் பத்து வயசு வித்தியாசம்,நாங்க நல்லா இல்ல”

“ஓவர் கான்பிடன்ஸ் மம்மீ”,சொல்ல நினைத்தேன்,சொல்லவில்லை.

“உங்கப்பா ஒத்துக்கிட்டார்,அவர் வார்த்தைக்காவது ஒரு நாளக்கி நல்ல பொண்ணா நாங்க சொல்றத கேளு,சுஜிய பார்த்து கத்துக்கோ,நாளக்கி பாரு,பேசு.உனக்கு பிடிச்சிருந்தாதான் கல்யாணம்.”

அப்பாவின் வாக்குத்தத்ததிற்காவது நான் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்.அம்மா சொல்வது கொஞ்சம் வேலைக்காவதுபோல் இருந்தது.சுஜியைத்தேடி மாடிக்குப் போனேன். படியேறும்வரை சுஜியை பற்றி சொல்கிறேன் கேளுங்கள்.சுஜி ஆள் சிவப்பு,ஒல்லி,உயரம்,நீளமுடி,பெரியவர்கள் சொல்லி சமையல்,கோலம்,கொஞ்சம் படிப்பு என கல்யாணத்திற்கெனவே பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட பிராணிகளில் ஒன்று.ஒயிட்லகான்! சுஜி இப்படி லேசா லேசா என வீட்டில் அவள் விஷயத்தை சொன்னால் “தீபாவளி தீபாவளி”,எனக்குத்தான்.அவள் வாயில் விரல் வைத்து கடிக்க சொல்லி கொடுத்ததே நாந்தான் என சித்தி சொன்னாலும் சொல்லுவாள்.ஆனா இந்த பக்கி வேகாத வெயில்ல கடல போட்டுட்டுருக்கு?

“ஹ்ம்ம்ம் அப்புறம் சாப்டிய்யா”,என்பது போன்ற உபயோகமான காவிய உரையாடல்களில் ஈடுபட்டிருந்தாள்.கொஞ்ச நேரத்தில்

“நான் சொல்றதயே கேக்க மாட்டியா,அந்த ப்ளூ ஷர்ட் போடாதன்னு எத்தன தடவ சொல்றது?” என மெதுவாக ஆரம்பித்து

“வேணாம்,நீ ஒன்னும் சொல்ல வேணாம்,இப்பலாம் நான் சொல்றத நீ எங்க கேக்குற,பேசாத,இனிமே என்கிட்ட தயவுசெய்து பேசாத”,என சட்டென்று ஓவர்கரெண்ட் ஆகி எறிந்துபோன பியூஸ்போல் முகத்தை வைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். என்னிடம் மட்டும் இப்படி கோபித்திருந்தால் பளாரென்று ஒரு அறை விட்டிருப்பேன்.சில நிமிடங்களில் அழைப்பு வருவதும்,துண்டிப்பதுமாக இருந்தவள் பிறகு பிகு பண்ணிக்கொண்டே பேசத்தொடங்கினாள்.

“போ புஜ்ஜிம்மா,நான் சொல்றதத்தான் நீ கேக்கனும்.

அவன்?புஜ்ஜிம்மா?புல்டோசர் மாதிரி இருப்பான்! இந்த கொடுமையெல்லாம் பார்க்கும்போது நான் ஏன் மொட்டைமாடியில் வத்தல்போல் காய்ந்து சுஜியின் காதலை வேடிக்கை பார்க்கவேண்டும்? இதற்கு அப்பா அம்மா சொன்னவனையே கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம், அட்லீஸ்ட், மொக்கையாவது போடலாம் எனத் தோன்றியது.செருப்பு அணியாத கால்களில் குதிகாலுக்கும் விரல்களுக்கும் ஏறிய சூடு உரைக்கவில்லை. எப்படியிருப்பான்?இன்னேரம் என்ன செய்து கொண்டிருப்பான்?

டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக்………

சனிக்கிழமை சாயந்திரம் வியாதியில்கூட சிக்கியிருக்கலாம்…ச்ச்ச்சீ!

எந்த குதிரையில் வருவான்?எப்போது வருவானோ தேடுகிறேன்…….

அப்படியே குதிரைய மடக்கி அவனத் தள்ளிவிட்டுட்டு ஓடிரனும்!

இது அந்த காலம்-முன் பனிக்காலம்-(1)

No comments:

Post a Comment