Tuesday, March 22, 2011

இது முன்பனிக்காலம்! (3)

வரவேற்பறையில் அந்த கூட்டம் காத்திருப்பது எனக்காகத்தான்.என்னை காக்க வைத்திருப்பதென்னவோ நல்லநேரத்திற்குத்தான். காத்திருக்கும்போது உள்ளுக்குள் ஒரு சின்ன சலனம்.முதல் முறை புடவை கட்டி நடக்கத்தெரியாமல் நடக்கும்போது வரும் அவஸ்தை.பிடித்த யாரோ நீண்ட நேரம் உற்று பார்க்கும்போது வரும் சிலீர்.ஒருவேளை உனக்கு பிடித்துவிட்டால்?அப்பாம்மா எதிர்பார்க்கும் அத்தனை தகுதியும் இருந்துவிட்டால் என்ன செய்வாய்? வேறென்ன செய்வாங்க கல்யாணந்தான்!சுஜி அவ்வப்போது ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக்கொண்டு கதவு பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

1.ஒருவேளை சுஜியை அவனுக்கு பிடித்து அவளையே டிக் அடித்துவிட்டால்? ஹய்யா நான் எஸ்கேப்!

2. ஒருவேளை சுஜியை அவனுக்கு பிடித்து அவளையே டிக் அடித்துவிட்டு,சுஜி திடீரென்று அலைபாயுதே ஸ்டைலில் என்னையும் சேர்த்து போட்டுக்கொடுத்துவிட்டால்!

3.ஒருவேளை மௌனராகம் மாதிரி, “நான் நல்ல பொண்ணு இல்ல,சொன்ன பேச்சு கேக்க மாட்டேன்,சமைக்கத் தெரியாது”,என்றால்?

4. ஒருவேளை மௌனராகம் மாதிரி அவன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு சைலெண்ட்டாக வெளியேவந்து என்னை ரொம்ப பிடித்திருப்பதாக போட்டுக்கொடுத்துவிட்டால்? என்னால் ப்ளாஷ்பேக் சொல்லும் சீனில், “ஏன்னா?ஏன்னா என் இதயம் என்கிட்ட இல்ல,என் இதயம் என்கிட்ட இல்ல”,என்றெல்லாம் கதறமுடியாது.

நான்கு சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து பார்த்ததில் எல்லா வழியிலும் எனக்கு மட்டுமே பாதகங்கள் என அறிந்தேன்.

இப்படியாக நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது,எனக்கு சம்மன் அனுப்பினார்கள்.நடுஹாலில் ஆஜர்!சுஜி பையன் யாரென்று சொல்லி அனுப்பியிருந்தாள் அவளுக்குப் பிடிக்காத ப்ளூகலர் சட்டை!அவ்வளவு மோசமில்லை.அத்தனை பேரும் இருந்ததால் என்னால் அவனை சரியாக பார்க்க முடியவில்லை.

பையன் வீட்டு சின்னக்குழந்தை ஒன்று என் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டது. “இப்பவே உனக்கு அத்தைய பிடிச்சிருச்சா?”,என்று நாத்தனார் லுக் இருந்த ஒருத்தி சொல்ல எல்லோரும் ஏதோ வில்பர் சற்குணம் வீடியோவை யூடியூபில் பார்த்தமாதிரி “ஹஹ்ஹஹ்ஹா ஹிஹ்ஹ்ஹீ”,என்று ஒரே சிரிப்பு,என்ன ஒரு எகத்தாளம்!அந்த கூட்டத்தில் தெளிவாக சம்பிரதாயத்துக்கு சிரித்தது நானும் ப்ளூ ஷர்ட்டும்தான்!அவ்வப்போது தலைமுடியை ஒதுக்குவது மாதிரி நானும்,கண்ணாடியை சரிப்படுத்தும்போது அவனும் யாருமறியாமல் பார்த்துக்கொண்டோம்.

நடுவில் எனக்குத் தராமல் அவர்கள் குடும்பம் மிக்சரும்,ஸ்வீட்டும் சாப்பிட்டது.டிபன் சாப்பிடாமல் இருப்பதற்கு காரணமாக, “தேதி குறிக்கிறவரக்கும் கைய நனைக்க மாட்டோம்ல!”அடேங்கப்பா!

சொந்த ஊர்,கிரிக்கெட்,அரசியல் எல்லாம் பேசிவிட்டு “பொண்ணு மாப்ள வேணா தனியா பேசட்டுமே” என அந்த குடும்பத்து பெரியவர் ஒருவர் சொன்னார்.

“மாடி பால்கனிலேர்ந்து பேசட்டுமே”

அவனும் நானும் மாடி பால்கனியில் தனியாக(!) பேச, துணைக்கு என் அம்மா,அவன் அம்மா,மற்றும் சித்தியும் வந்து பத்தடி தள்ளி நின்று கொண்டார்கள்.நான் என் கைகளில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட வளையல்களை எண்ணிக்கொண்டிருந்தேன்.அவன் தூரத்தில் தெரிந்த மின்சார வயரையும் அதில் அமர்ந்திருந்த காக்கையையும் உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.எனக்கு பயமாக இருந்தது.அவன் பார்வை கொஞ்சம் தீவிரவாதி மாதிரியும் கொஞ்சம் இலக்கியவாதி மாதிரியும் விட்டால் திடீரென்று ஒரு கவிதை சொல்ல போகிறவன் போலவும் ஒரு யத்தனத்தை வெளிப்படுத்தினான்.திடீரென “காக்கா செத்துருச்சு”, என்றான். அவன் என்னிடம் பேசிய முதல் வார்த்தை!

என்னது?

“இல்ல ஷார்ட் சர்க்யூட் ஆகி செத்துருச்சு!”, என்றான்.

கரெண்ட் கம்ப காக்கா கீழே விழுந்திருந்தது. முதல் முதல் பேசும்போது “பிடிச்சிருக்கா”, “நீ ரொம்ப அமைதியோ”, “இந்த எடம் நல்லா இருக்கு”,இப்படி ஏதாவது சொல்லியிருக்கலாம்.அந்த முதல் வார்த்தைக்காகவே நான் அவனை வெறுத்திடுவேன் என தோன்றியது.இறந்துபோன காக்கைக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலியா செலுத்த முடியும்?எனக்கு அத்தனை காருண்யம் இல்லை.அதற்கடுத்த நொடி அவன் பேசத்தொடங்கினான்,பள்ளி,கல்லூரி வாழ்க்கையை பற்றி,அவன் எதிர்பார்ப்புகளை பற்றி.என்னை கேட்கவில்லை என்பதைவிட நான் சொல்லவில்லையென்பதே சரியாக இருக்கும்.அவன் எதிர்பார்ப்புகளின் அடுத்தவரியாய் நான் தொடர்ந்தேன்.

“கல்யாண்ஜி படிச்சிருக்கீங்களா?”

யாரு கல்யாணியா?”,என்றான்.

எனக்குத் தெரியும் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு இலக்கிய ரசனை அடிப்படை இல்லையென.ஆனால் அவர் ஒரு கவிஞர் என்றதும், “அதெல்லாம் டைம் வேஸ்ட்டுங்க படிக்கறதில்ல!”,என்றான்.

என்னை நானே ரசிக்கும் அந்த ஒரே விஷயமான என் கவிதைகளையும் அவன் இரசிக்கப்போவதில்லை.

“அப்போ ஹாபீஸ்?”

“கிரிக்கெட் பாப்பேன் பைத்தியம் மாதிரி,ஹைலைட்ஸ் முதற்கொண்டு!”

என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.தொலைக்காட்சியை அவனுக்கு தந்துவிட்டு எனக்கு பிடிக்கவே பிடிக்காத கிரிக்கெட்டை வாழ்க்கை முழுக்க அவனுக்காக சகிக்க முடியாது.என்னால் அதற்குமேல் பேச்சில் சுவாரஸ்யம் காட்ட முடியவில்லை.அதற்குள் பத்து நிமிடங்கள் ஆகவே அம்மாவும்,சித்தியும் இருமத் தொடங்கினார்கள்.அலாரம் அடித்ததை உணர்ந்து இடத்தை காலி செய்யும்போது அவன் கண்களில் ஒரு சின்ன சிரிப்பு புதிதாய்.எனக்கு பிடிக்காத நேரத்தில் வரும் அப்ரிசியேஷனைப் போல் இருந்தது.அவர்கள் ஊருக்குபோய் குடும்ப சாமியாரை கலந்தாலோசித்துவிட்டு நல்ல சேதி சொல்வதாக கிளம்பினார்கள்.எனக்கு அவர்கள் கிளம்பும்முன்னரே தெரியும் நான் என்ன பதில் சொல்வேனென்று. என்னால் ஒரு தொலைக்காட்சி தியாகியாக வாழ்க்கை முழுக்க இருக்க முடியாது. ஆனாலும் அந்த கடைசி சிரிப்பு எனக்கு பிடித்திருந்தது!

இது அந்த காலம்-முன் பனிக்காலம்-(1)(2)

No comments:

Post a Comment