Tuesday, March 22, 2011

இது முன்பனிக்காலம்!

“சீதா உனக்கு புடிச்சிருக்கோ இல்லையோ உனக்கு கல்யாணம் ஆயிருச்சு,சாயந்திரம் ரிசப்ஷன்! போ ரெடியாகு”

அழுதுகொண்டே நான்,

“முடியாதும்மா என் ஃப்ரெண்ட்ஸ்க்குகூட சொல்லலம்மா,நாளைக்கு அவங்க முகத்தில எப்படி முழிப்பேன்?”

“அதெல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம்,மாப்ள வீட்ல வெயிட் பண்றாங்க”

“எனக்கு தெரியாது,நான் தூங்கும்போது நடந்த இந்த கல்யாணத்த கேன்சல் பண்ணுங்க”

“யார்ரீ இவ கொத்துபரோட்டா பார்சல் கேக்கறமாதிரி” ,

என் தம்பி ஓங்கி அறைந்ததில் “ஆ”, என அலறினேன்.

அலறி அடித்துக்கொண்டு எழுந்தேன்.எஸ்,யு ஆர் ரைட்!கனவுதான்.(ஏன்னா எனக்குத்தான் தம்பியே கெடயாதே!)ஆனாலும் ஒரு ரெண்டு நிமிஷம் என்னால் இதயத்துடிப்பை அடக்க முடியவில்லை.அதிர்ச்சியாக இருந்தது.உண்மையிலேயே கல்யாணம் ஆன மாதிரி.அப்படி ஓரு கல்யாணம் திடீரென காலை எழுந்ததும் கழுத்தில் தாலி, இனி உன் வாழ்க்கை இவனோடுதான் என்றால் எப்படி இருக்கும்?அதுதான் நடக்கிறது இப்போது வீட்டில்,எனக்கு கல்யாணமாம்,மாப்பிள்ளைத் தேடும் படலமாம்.எப்படி ஆரம்பிப்பார்கள்?ஒரு காகிதத்தை வைத்து,சில சதுரங்களுக்குள் வாழ்க்கையை அடக்கிவிட்டதாய் நினைத்துகொண்டு,என்னை கூண்டுக்குள் தள்ளப் போகிறார்கள்.அவனுக்கு நான் எதிர்பார்த்த முகம் இல்லாவிட்டால்,அவனுக்கு எனக்கு பிடித்த மாதிரி பேச தெரியாவிட்டால்?என்னை பிடிக்காவிட்டால்?என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.இன்னும் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறதெனக்கு.தலை வலித்தது,ஒரு காபி குடித்தால் சரியாகிவிடுமெனத் தோன்றியது.அப்பாவிடம் இதுபற்றி பேசவேண்டும்.மெதுவாக எழுந்து வரவேற்பறைக்கு வந்தேன்,சோம்பல் முறித்தவாறே.அப்பா சில ஜாதகங்களுடன்,அம்மா ஒரு தினசரி நாள்காட்டியோடும் அலைகற்றை பிரச்சினையில் தெரியாமல் மாட்டிக்கொண்ட எம்.பி ரேஞ்சுக்கு கவலைக்கோடுகளோடு அமர்ந்திருந்தனர்.

“இன்னிக்கே எடுத்துட்டு போய் ஜோசியர்ட்ட காட்டிட்டு வந்திரலாங்க”

“8 மணிக்கு ரெடியாயிரு அப்பத்தான் 9மணிக்கு போக முடியும்,அவ முழிக்கறதுக்குள்ள திரும்பிறலாம்”

ஆஹா!எனக்குத் தெரியாமல் ஒரு சதித்திட்டம் தீட்டப்படுகிறது!உஷார் சீதா!அப்பத்தான் நான் விக்கிலீக்ஸ் அசாஞ்சே மாதிரி உள்ள நுழைஞ்சேன்.ஜாதககட்டுகளை மறைக்கக்கூட இல்லை! அவ்வளவு தைரியமா?

“என்ன பேசிட்டுருக்கீங்க ரெண்டு பேரும்?”

“பால்பாக்கி பத்தி பேசிட்டுருந்தோம்” ,

:evil: நக்கலு? சரி நம்ம வேலய பாப்போம்!

“அம்மா காபிம்மா”

அம்மா வழமை(!) போல காபி போட போனாள்.ஆங்!அப்பாவைத்தான் நல்லா சோப்பு போட முடியும்.பக்கத்தில் போய் பேப்பர் எடுத்து படிப்பதுபோல நடித்துவிட்டு,

“டாடி எனக்கின்னிகொரு கெட்ட கனவு டாடி”

“என்னடா கன்னுக்குட்டி?”

“என்ன ஒரு முன்ன பின்ன தெரியாதவனோட கல்யாணம் பண்ணி வச்சிடற மாதிரி கனவு டாடி”

“உனக்கு இப்பவும் அப்டித்தாண்டா பண்ணப்போறோம்”

“டாடி விளையாடாதீங்க டாடி!எனக்கு கல்யாணம்லா வேணாம் டாடி”

“என்னம்மா நீ சின்ன வயசுல ஊசி வேணாம்னு சொன்ன மாதிரியே இப்பவும் சொல்றியே”

“இல்ல டாடி,வந்து எனக்கு இன்னும் மைன்ட் செட் ஆகல டாடி ப்ளீஸ்”

“அப்டில்லாம் சொல்லக் கூடாதும்மா,நேரங்காலம் வந்தா எல்லாம் தானா செட் ஆகும்ம்மா”

நான் எதுவும் சொல்லாமல் ரிமோட்டை தேய தேய மாற்றிக் கொண்டிருந்தேன்.அடுத்து காபி வந்தது.அவசரமாக எடுத்து பருகத் தொடங்கியதில் வழமை போல (மறுபடியும் பார்ரா!) கொஞ்சம் கீழே சிந்தியது.

“ஏங்க இவளுக்கு காபியே சிந்தாம குடிக்க தெரியல,மூணு வயசிலேர்ந்து ஒரு சொட்டு காபி கீழ படாம குடிச்சதில்ல,இவளுக்கு கல்யாணம் பண்ணினா என்னா குடுத்தனம் பண்ணுவாளோ,அந்த முத்துமாரியம்மனுக்கே வெளிச்சம்”

“அதாம்மா சொல்றேன்,மொதல்ல சிந்தாம காபி குடிக்க கத்துக்கறேன்,அப்புறம் கல்யாணம் பண்ணி வைங்கம்மா”,என செல்லம் கொஞ்சினேன்.

“இந்த ஐஸ் வைக்கிற வேல எல்லாம் வேணாம்,இன்னிலேர்ந்து சாட்டர்டே சண்டே தினமும் டிபன் நீதான்,அப்புறம் மாப்புள வீட்டுல என்னா கத்துக் குடுத்துருக்கேன்னு மூக்கு மேல பல்லு போட்டு பேசுவாங்க”

இப்படியே சில பல அறிவுரைகள் கொடுத்துவிட்டு பிறகு கிளம்பினார்கள் அந்த ஜோசியர் வீட்டுக்கு.

“பாலத்து ஜோசியனும் கிரகம் படுத்துமென்றே விட்டான்” -அவன் பாரதி படிச்சிருப்பானா?

பார்க்க ரொம்ப நிறமாக இருப்பானா? எனக்கு பிடிக்காதே!

தெரிந்ததை பேசி தெரியாததை கேட்டுகொள்வானா?

எல்லாம் தெரிந்ததாய் நாடகம் போடுவானா?

அரைக்காசு உத்தியோகத்திற்கு பெருமைப்பட்டு கொள்பவனா?

எனக்கு பிடித்த நேரத்தில் பேசி பிடிக்காத நேரத்தில் மௌனம் காப்பானா?ஒரு பிறந்த நாளன்று பூனைக்குட்டியை பரிசளிப்பானா?

அவனது முதலும் கடைசியுமான காதலி நான்தான் என்று ஒரு வாழ்க்கைக்குமான வாழ்வை வாழ்வதற்கு முன்னரே நம்பிக்கையுடன் சொல்வானா?

என் காதல் தோல்வியை சொன்னால், “அது என் பிரார்த்தனை”,என குறுஞ்செய்தி அனுப்பி புன்னகைப்பானா?

நாசூக்காய் காய்கறி மட்டும் நறுக்காமல் குழந்தையின் நரகல்கூட கழுவுவானா?

எனக்கு வாசந்தி கதைகளில் வருவதுபோல் ஆயாசமாக இருந்தது!

மறுநாள் நடக்க போவது தெரிந்தால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் என அப்போது எனக்கு தெரியவில்லை.

பி.கு: தொடர் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.சங்கு முழங்கப்பட்டுவிட்டது!உங்கள அந்த ஆண்டவனால்கூட காப்பாத்த முடியாது இனிமே!அடுத்த அத்தியாயம்,எனக்கு விஷயம் அகப்பட்டபிறகு!

No comments:

Post a Comment