“தெரியல சுஜி,மொதல்ல அவங்களுக்கு என்ன பிடிக்கட்டும்,அப்பறமா யோசிச்சிக்கலாம்”
“பிடிச்சிருந்துதுன்னா?”
“எனக்கு தெரியல சுஜி,இவந்தானான்னு,எல்லாமே ரொம்ப ஃபாஸ்ட்டா நடக்குதோன்னு தோணுது”
“அம்மா சொல்றத கேட்டல்ல,நேரம்னு வந்தா அதெல்லாம் தானா நடக்கும்”
“ஆனா என்னோட வாழ்க்கய நாந்தான் தீர்மானிக்கனும்,so called நேரமில்ல”
“Its too late now,இதுக்கப்புறம் நீ ஒருத்தன லவ் பண்ணி,புரிஞ்சிகிட்டு அப்பாம்மாவ கன்வின்ஸ் பண்ணி,அதுக்குள்ள எனக்கே புள்ள பொறந்துரும்,அதுக்கு நீ பேசாம அவங்க சொல்ற பையனயே கல்யாணம் பண்ணிக்கலாம்”
“அவங்க சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கறதுல பிரச்சின இல்ல சுஜி,அதுல லவ் இருக்கனும்ல”
“ஒண்ணு சொல்லவா,லவ் பண்ணிட்டு எப்டி அரேஞ்ஜ்டு மேரேஜ் ஆகனும்னு எதிர்பார்க்க முடியாதோ,அப்டித்தான் அரேஞ்ஜ்டு மேரேஜ்ல லவ்வ ஆரம்பத்துலயே எதிர்பார்க்கறதும்,பேசி பழகினாத்தான தெரியும்?”
“ஆனா லவ் பண்ற பையன் பிடிக்கலன்னா விட்டுட முடியும்,ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டா பண்ணிகிட்டதுதான் இல்லயா”
“இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற? லவ்வும் பண்ண மாட்ட?ஆனா வர்றவன் உன்ன லவ் பண்ணனும்னு சொல்ற?அதானே”,என்று சொல்லிவிட்டு சுஜி லெக்சரருடன் பாடம் கேட்கத் தொடங்கினாள்.அம்மாவும்,சித்தியும் அடுத்த வீட்டு ஆண்ட்டியுடன் கதையளக்கும் நேரந்தான் அவளுக்கு பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் டைம்!நான் மறுநாள் விடுதிக்கு செல்ல கிளம்பிக்கொண்டிருந்தேன்.அந்த பட்டுப்புடவையை மடித்து வைக்கும்போது எனக்குள் பலவிதமான எண்ணங்கள் ஓடின,அதில் முக்கியமான ஒன்று, “அம்மாவ ட்ரைகிளீன் பண்ண சொல்லனும்”.
அலுவலக குரைப்புகளை சமாளித்துவிட்டு விடுதி வரும்போது மணி எட்டரை.அதுவரை எனக்காக சாப்பிடாமல் காத்திருந்த லவ் என்கிற லாவண்யாவும்,அச்சு என்கிற அர்ச்சனாவும் திட்ட முடியாமல் பாசமாய் தட்டை எடுத்துக்கொடுத்து இரவு உணவுக்கு அழைத்துச்சென்றனர்.பெண் பார்த்த கதையை கேட்க அத்தனை ஆர்வம் அதுகளுக்கு.அந்த காய்ந்துபோன சப்பாத்தியோடு தாலோடு என் கதையையும் சேர்த்து தள்ளிக்கொண்டிருந்தோம் உள்ளே.
“பிடிச்சிருக்காடி?”,அச்சு கேட்டாள்.
“போடீ எல்லாரும் இதே கேள்விய கேக்கறீங்க,எனக்கு என்ன சொல்லன்னே தெரியல”
“எவ்ளோ ஈசியான கேள்வி,செமஸ்டர் எக்ஸாம் பேப்பர் மாதிரி அவ்ளோ பில்டப்பா இதுக்கு?”,லவ் வழக்கம்போல ஒரு எடுத்துக்காட்ட காட்ட,
“இல்ல,அவனுக்கு என்ன பிடிச்ச மாதிரிதான் தெரியுது,ஆனா அவன்கிட்ட ஒரு இண்ட்ரெஸ்ட்டே இல்ல,எனக்கு அதுதான் வித்தியாசமா தெரியுது”
“ஒருவேள அவன் கொஞ்சம் அவ்ளோ ஈசியா உணர்ச்சிகள வெளிக்காட்டாத ஆளா இருப்பான்”
“என்னமோ”, காகம் இறந்ததற்கு மட்டும் கலவரம் காட்ட தெரியுமா?
பேசிக்கொண்டே அறை வந்து சேர்ந்தோம்.அங்கே இளவழகி மடிக்கணினியோடு wi-fi சிக்னல் தேடிக்கொண்டிருந்தாள்.
“இதுக்கு நீ உன் ஆளுக்கு தீப்பெட்டி வாங்கி குடுத்து கயிறு கட்டியே பேசிருக்கலாம்டி”,லவ் மெய்க்கூற்று.
அவள் ஆள் எங்கள் விடுதிக்கு அடுத்த அபார்ட்மெண்ட்டில்தான் குடியிருந்தான்.அந்த பத்து மணி நேரம்கூட விடாமல் முகம் பார்க்கனுமாம்,வீடியோ சாட்தான்!
“சிக்னல் கெடச்சிருச்சு!”,என இளவழகி டொட்டாயிங் என்று ஸ்கைப்படிக்க ஆரம்பித்தாள்.
எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.மிஸ்டர்.காக்கைசித்தனின் பெயரைச் சொல்லி முகனூலில் தேடச் சொன்னேன்.வரிசையான சம்பந்தமற்ற முகங்கள்.அவன் அப்பா பெயரையும் இணைத்ததில் மூன்று ஒத்திருந்தன.
“முதல் ஆளு டெக்ஸாஸ்ல எம்.எஸ் இதில்ல”
“அடுத்தவன் சாஃப்ட்வேர் இதுவும் இல்ல”
சந்தேகமில்லாமல் அடுத்த அறிமுகம் அவனுடையதானது.
புகைப்படம்,படிப்பு,கல்லூரி வரிகளுக்கு அடுத்து தேள் கொட்டியது.
“In a relationship with Arundhati”,WTH!
“என்னடி இது…”
எனக்கு அந்த நிமிடம் அவனைக் கொல்ல வேண்டும் போல இருந்தது.
“ஹேய் ரிலாக்ஸ்,may be this is old!”,அச்சு என் கைபிடித்து அழுத்த,எனக்கு எதுவும் புரியவில்லை.ஏன் இப்படி,எனக்கு மட்டும்?
“இப்ப ரிலேஷன்ல இருக்கானாங்கறதுதான் முக்கியம் சீது,அவன்கிட்ட பேசி முடிவெடு”,லவ் அறிவுறுத்த
“whatever,அவன் இத பேசும்போதாவது சொல்லிருக்கனும்ல,இதெல்லாம் ஏமாத்துவேல”,இளவழகி முற்றுப்புள்ளி வைத்தாள்.
நான் அடுத்த பத்து நிமிடங்களில் அம்மாவை அழைக்க கைபேசியின் எண்ணொத்தினேன்.
“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் மற்றொரு அழைப்பில் இருக்கிறார்”,இரண்டு மூன்று முறை அழைத்ததும் அம்மா லைனில் வந்தாள்.
“அம்மா யாருகிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டிருந்த?”,வள்ளென்று விழுந்தேன்.
“இல்லம்மா வந்து”
“என்னம்மா சீக்கிரமா சொல்லு..எனக்கிருக்கற டென்ஷன்ல நீ வேற இழுத்துகிட்டு”
“அந்த பையனோட மாமா பேசினாரும்மா,அவன் இப்ப கல்யாணம் வேணான்னு சொல்றானம்மா”
“என்னம்மா சொல்ற?”,எனக்கு அய்யோன்னு இருந்தது.அவன் என்னை நிராகரிப்பதாவது?
“அவனுக்கு கல்யாணம் பிடிக்கலயாம்மா,அவன் இதுக்குமேல கம்பெல் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டானாம்மா”
“நான் பாட்டுக்கு செவனேன்னு தானேம்மா இருந்தேன்?இப்ப திருப்தியா ஒனக்கு?”,எனக்கு குரல் உடைந்தது.
“சாரிடி செல்லம்,இனிமே உன்ன கேக்காம எதும் செய்ய மாட்டோம்,அவன் வேணாம்,உன் நெறம்கூட இல்லை”
“நான் ஒன்னும் சின்ன கொழந்தையில்லம்மா,ப்ளீல் ஃபோன வச்சிரு”
“இல்லடி ராசாத்தி,அப்பாவும் கொஞ்ச நாளக்கி உன்ன தொந்தரவு செய்ய வேணான்னு சொல்லிட்டாரு,மனசில் எதயும் வச்சிகாதடீ,நல்லா சாப்பிடு,தூங்கு,நீ என்னவோ சொல்ல வந்தியே?”
“அதொன்னுமில்லம்மா,விட்டுடு,தூக்கம் வருது,குட்நைட்”
விஷயம் தெரிந்த என் தோழிகள் முகத்தில் சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்ற குழப்பம் தெரிந்தது.
“அவன் சரியான ஃப்ராடுடீ,பூன மாதிரி வந்து பாத்துட்டு,இப்ப வேண்டான்னா என்ன அர்த்தம்”
“நம்ம சீத்தூக்கு என்னடி கொறச்சல்,இவனல்லாம் தூக்கி போட்டு மிதிக்கனும்”
அவர்கள் எனக்காக அங்கே பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதைவிட என்னைப்பற்றி பேசுவது எனக்கு எரிச்சலைத் தந்தது.
“Will you please shutup!”
அவசர அவசரமாக அறையைவிட்டு வெளியேறி மாடிக்கு போனேன்.நட்சத்திரங்களெல்லாம் என்னை பார்த்து கிண்டல் செய்வதுபோல சிரித்தன.எனக்கு மட்டுமே எழுதிய கவிதையைப்போல் ஒருவனை எதிர்பார்த்து அது யாரோ இரசித்த கவிதையென தெரிந்த ஏமாற்றம் என்னை அரித்தது.நான் நிராகரிக்கும்முன் அவன் முந்திக்கொண்டது அவமானமாக இருந்தது.எங்கோ வானத்தில் வால்நட்சத்திரம் ஒன்று உதிர்ந்து விழுந்துகொண்டிருந்தது.எதிர்பார்ப்புகள் இருக்கும்வரை உதிரவேண்டியதுதான் என்று எனக்கு புரிந்ததது.அந்த நாளை காலம் முழுக்க நான் சபிக்கப் போகிறேனென்று தெரிந்தது.அவன் சிரித்த சிரிப்பு என்னை பைத்தியக்காரியாக்கியதற்காக என்று புரிந்தது.கொஞ்ச நேரம்தான்,அதற்குள் பழைய சோகங்களுடைய அலமாரியில் இதுவும் போய் அமர்ந்து கொண்டது.அவனை கற்பனையாக திட்டி தெளிந்துபின்,அடுத்த முறை அவனை பார்த்தால் என்ன சொல்வேனென ஒத்திகை பார்க்க முடிந்தது.
No comments:
Post a Comment